குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
நெல்ைல, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நெல்ைல, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மழை
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2-ந்தேதி இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தலையணை மற்றும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தடை நீட்டிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறையவில்லை. இதனால் நேற்று 2-வது நாளாக அருவி பகுதிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக 86.30 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 87.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,260 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 485 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாபநாசம் அணைக்கு 1,133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 915 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மழை அளவு
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை அளவு பதிவாகியது. அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல், நாங்குநேரி, நெல்லை, பாளையங்கோட்டை, கன்னடியன் கால்வாய், களக்காடு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
நெல்லையில் பலத்த மழை
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகப்பட்சமாக 9.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 7 மில்லிமீட்டரும், தென்காசியில் 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
குற்றாலம் அருவியில்
நீர்வரத்து அதிகரிப்பு
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் அதிகமாக காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்.