நிதானம் தவறிய பயணத்தால் விபத்து-உயிரிழப்பு அதிகரிப்பு


நிதானம் தவறிய பயணத்தால் விபத்து-உயிரிழப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்டு... நிதானம் தவறிய பயணத்தால் விபத்து-உயிரிழப்பு அதிகரிப்பு பொதுமக்கள் கருத்து

கடலூர்

கடலூர்

உணவு, உடை, உறைவிடம் ஆகியவை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த பட்டியலில் வாகனமும் புதிதாக இணைந்து கொண்டது.

வாகனம் இன்றி எதுவும் இல்லை

"வாகனம் இல்லாத மனிதன் வாழவே முடியாது" என்று கூறும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வசமாகி இருந்த வாகனங்கள், இன்று அனைத்து தரப்பினருக்கும் உறவாகி விட்டது. வெளியூர் பயணத்துக்கு மட்டுமே வாகனத்தை பயன்படுத்திய காலம் மாறி, பக்கத்து தெருவுக்கு செல்வதற்கும் கூட வாகனம் தேவை என்ற நிலை உருவாகி இருக்கிறது. வேலை, பயணம், பொழுதுபோக்கு என எதுவானாலும் வாகனம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது.

இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு மோட்டார் சைக்கிளாவது இருக்கிறது. அந்த அளவுக்கு அனைவரின் வாழ்விலும் வாகனங்கள் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து, நகரின் அனைத்து சாலைகளிலும் வாகன அணிவகுப்பை பார்க்க முடிகிறது.

சாலை விதிகள் மீறல்

மனிதர்கள் வாகனங்களில் நெரிசல் இல்லாமல் சிரமமின்றி, விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு சாலை விதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஓட்டுனர் பயிற்சி பெறும் போதும், வாகன ஓட்டுனர் உரிமம் வாங்கும் போதும் மட்டுமே பலருக்கு சாலை விதிகள் நினைவில் இருக்கின்றன.

வாகனங்களில் ஏறி அமர்ந்ததும் சாலை விதிகளை மறந்து ஜெட் விமானம் ஓட்டுவது போன்ற நினைப்பு வந்துவிடுகிறது. இதனால் குடிபோதை, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல், லாரிகளில் சரக்குகளின் மேல் ஆட்களை அமர வைத்தல், வளைவில் முந்தி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னல் செய்யாமல் திரும்புதல் என சாலை விதிகள் மீறல் நீண்டு கொண்டே செல்கிறது.

விபத்துக்கான காரணம்

இதன் விளைவாக சாலை விபத்துகள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாகனங்கள் பெருகி விட்டதால் நெரிசல் இல்லாமல் பயணிக்க நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. அந்த அகலமான சாலையிலும் கவனக்குறைவு, முந்தி செல்லும் ஆவல் ஆகியவற்றால் விபத்தில் சிக்கி கொள்வது வேதனை அளிக்கிறது. வேகமாக சென்றால் தான் வாகனம் ஓட்டுவதற்கே அர்த்தம் எனும் மனநிலையில் பலர் உள்ளனர்.

எனவே நான்கு வழிச்சாலையில் மட்டுமின்றி கிராம சாலைகளில் கூட சர்வ சாதாரணமாக விபத்துகள் நடக்கின்றன. இரு பஸ்கள் எளிதாக விலகி செல்லும் சாலையில் கூட, இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொள்வது மிகவும் கொடுமையானது. நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி செல்வதே விபத்துக்கு காரணமாகி விடுகிறது.

உடல் உறுப்புகள் இழப்பு

இவ்வாறு விதிகளை மீறும் பயணம் செய்வோரால், சாலையில் முறையாக செல்வோரும் துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவமும் நடக்கிறது. எனவே விபத்தை ஏற்படுத்தும் நபர் மட்டுமின்றி பிறரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நொடி பொழுதில் நிகழும் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழப்பவர்கள் ஏராளம்.

இதுமட்டுமின்றி கோர விபத்துகளால் விலை மதிப்பு இல்லாத உயிரை பறிகொடுத்தவர்களும் உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் குடும்பம் பெரும் துயரத்துக்கு உள்ளாகிறது. பல குடும்பங்களை வறுமை வாட்டி வதைப்பதற்கு விபத்துகளும் காரணமாக இருக்கின்றன.

இதனால் சாலை விபத்துகளை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாதந்தோறும் மாவட்ட அளவில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனித்தனியாக சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்மூலம் விபத்து பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சாலை விதிகளை மதிக்காத நபர்களால் விபத்துகள் நடந்து உயிர்பலி ஏற்படுவது தொடர் கதையாகவே உள்ளது.

வாகனம் ஓட்டுவதில் நிதானம்

அவ்வாறு உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் துயரத்தில் இருந்து மட்டுமின்றி பொருளாதாரத்திலும் மீண்டு வருவது கடினம். பூமியில் மனித பிறப்பு மிகவும் அரிதானது. அத்தகைய அரிய பிறப்பை வீணடிக்காமல் தனக்கும், குடும்பத்தினருக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் வாழ வேண்டும்.

இதற்கு வாகனத்தை ஓட்டுவதில் நிதானமாக இருப்பதோடு, சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம். தனக்கும், பிறருக்கும் தொல்லை தரும் வகையில் வாகனத்தை ஓட்டுவதை தவிர்ப்போம். இதுகுறித்து கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கடந்த ஆண்டைவிட குறைவு

சிதம்பரம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமஜெயம்:- சிதம்பரம் பகுதியில் சிதம்பரம்-கடலூர் புறவழிச்சாலையில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதுபோல் சிதம்பரம் பழைய புவனகிரி ரோடு, சிதம்பரம்-சீர்காழி புறவழிச்சாலை ஆகிய பகுதிகளிலும் விபத்துகள் அதிக அளவு ஏற்பட்டு வந்தது. தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி போலீசார், அதிகளவில் விபத்து நடைபெறும் பகுதியை கண்டறிந்து, அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர். மேலும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி செல்லும் வகையில் தேவையான இடங்களில் பேரி கார்டுகளும், ஒளிரும் தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பழுதான சிக்னல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் சீரிய முயற்சியால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெருமளவு விபத்துகள் குறைந்துள்ளன.

நடவடிக்கை

வெங்கனூர் ராமச்சந்திரன்:- கடலூர் மாவட்டத்திலேயே அதிகளவு சாலை விபத்துகள் நடக்கும் பகுதியாக வேப்பூர் உள்ளது. அதாவது வேப்பூர் அடுத்த ஐவதுக்குடி மற்றும் ஆவட்டி கூட்டுரோடு, எழுத்தூர் கூட்டுரோடு, சிறுபாக்கம் அருகே உள்ள அடரி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் விபத்து நேர்கிறது. மாவட்டத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் பாதிக்கும் மேல் இங்கு தான் நடக்கிறது. அதனால் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாடிக்கையாகும் விபத்து

விருத்தாசலம் அனிதா:- இன்றைய காலக்கட்டங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் இளைஞர்களாலும், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்களாலும் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. 18 வயது நிரம்பாத பிள்ளைகளிடம் வாகனத்தை அளித்தால் பெற்றோர்களுக்கு தான் தண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இருந்தும், இது போன்ற நிகழ்வு நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் நகரத்துக்குள் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விருத்தாசலம் பகுதியில் சாலை விபத்துகள் என்பது வாடிக்கையாகி விட்டது. எனவே சாலை விபத்துகளை கட்டுக்குள் கொண்டு வருவது போக்குவரத்து போலீசாரின் கடமையாகும்.


Next Story