கடன் செயலிகளால் பாதிப்புகள் அதிகரிப்பு
கடன் செயலிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்திய போதும் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக புகார்கள் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் குவிந்து வருகிறது.
கடன் செயலிகள்
தமிழகத்தில் கடன் செயலிகளால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏராளமான பெயர்களில் கடன் செயலிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், மக்களுக்கு எளிய முறையில் சிறுகடன்களை இதுபோன்ற செயலிகள் வழங்கி வருகின்றன. செல்போன் பயன்படுத்தும் மக்கள் தங்களின் அவசர தேவைக்கு இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கும் கடன் தொகையை சில நாட்களில் திருப்பி செலுத்தியும் வருகின்றனர்.
அவ்வாறு கடனை திருப்பி செலுத்திய போதிலும் சில கடன் செயலிகளின் பெயரில், கடன் பெற்றவர்களை மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தேனியில் கடன் செயலி மூலம் கடன் பெற்ற புத்தக கடைக்காரர் தனது கடன் தொகையை செலுத்திய போதிலும், அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி பணம் கேட்டு சிலர் மிரட்டினர். இதுதொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மராட்டியத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கும்பலின் தலைவன் மலேசியாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
40 புகார்கள்
அதேநேரத்தில் இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் பெற்ற பலரின் புகைப்படங்களையும், அவர்களின் செல்போனில் சேமித்து வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் மார்பிங் செய்து அனுப்பி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்து வருகின்றனர்.
கடன் செயலியில் கடன் வாங்கி பணத்தை திருப்பி செலுத்திய பின்பும், வக்கிரமான செயல்பாடுகளுடன் மீண்டும் பணம் பறிக்க முயற்சி செய்யும் கும்பல் தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார்கள் மீது சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற கடன் செயலிகளில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு கடன் பெற்றவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டால் தாமதமின்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.