பார்வைக் குறைபாடு பிரச்சினை அதிகரிப்புஇளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள்:ஆசிரியர், மருத்துவர் கருத்து
பார்வைக் குறைபாடு பிரச்சினை அதிகரிப்பு காரணமாக இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள் குறித்து ஆசிரியர், மருத்துவர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம். முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
இளம் வயதினர்
தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.
செல்போன், டி.வி. பார்ப்பது
தேனியை சேர்ந்த கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதி ராஜேஷ் கூறும்போது, 'குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றது. முன்பெல்லாம் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் தான் கண் பரிசோதனை செய்து கொள்வார்கள். தற்போது குழந்தைகளின் நலன் கருதி அவர்களை பள்ளியில் சேர்க்கும் முன்பே கண் பரிசோதனை செய்து கொள்ளும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதுவும் ஒருவிதமான விழிப்புணர்வு தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 100 பேருக்கு கண் பரிசோதனை செய்தால் அவர்களில் 10 முதல் 12 பேருக்கு பார்வைக் குறைபாடு இருக்கும். தற்போது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 20 முதல் 22 பேருக்கு பார்வைக்குறைபாடு கண்டறியப்படுகிறது. 2040-ம் ஆண்டில் இது 40 முதல் 50 சதவீதமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மாறி வரும் உணவு பழக்க வழக்கம், இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது போன்றவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.
தினமும் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே சென்று விளையாட வேண்டும். வெளியே சென்று விளையாடும் போது கண்ணின் நிறத்தன்மை பாதுகாக்கப்படும். வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, டி.வி., செல்போன் பார்த்துக் கொண்டு இருக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம். இனி வரும் காலங்களில் செல்போன் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள போதிலும், கண்களின் பாதுகாப்பு மீதும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்' என்றார்.
பெற்றோர் பங்களிப்பு
கம்பத்தை சேர்ந்த ஆசிரியர் லோகநாதன் கூறும்போது, 'இன்றைய குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். பெற்றோர்களும் குழந்தைகள் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும் என்பதற்காக செல்போனை கொடுத்து உணவு ஊட்டுவது, தங்கள் வீட்டு வேலைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக செல்போனை கையில் கொடுத்து பார்க்கச் செய்வது என்று இருக்கின்றனர். அதுவே அவர்களுக்கு செல்போன் மீதான மோகத்தை அதிகரித்து அதற்கு அடிமையாக்கி விடுகிறது. அதில் இருந்து குழந்தைகள் மீள்வது இல்லை.
இதனால், கண் பாதிப்பு ஏற்பட்டு இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைமை உருவாகிறது. முன்பு பள்ளியில் ஏதாவது ஓரிரு குழந்தைகள் தான் கண்ணாடி அணிந்து இருப்பார்கள். இப்போது ஏராளமான குழந்தைகள் கண்ணாடி அணிந்து வருகின்றனர். ஆசிரியர்களாக நாங்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். ஆனால் பெற்றோரின் பங்களிப்பு இதில் அதிகமாக இருக்கிறது. குழந்தைகளை காலை நேரம் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, மாலையில் வெளியே விளையாட அனுமதிப்பது அவசியமாக இருக்கிறது' என்றார்.
அலட்சியம் கூடாது
தேனியை சேர்ந்த கண் கண்ணாடி கடை ஊழியர் கருணாநிதி கூறும்போது, 'இன்றைய கால கட்டத்தில் குழந்தை பருவத்திலேயே கண் பார்வை குறைபாடு அதிகம் கண்டறியப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை அதிக நேரம் பயன்படுத்த வேண்டிய நிலைமை குழந்தைகளுக்கு ஏற்பட்டது. பின்னர் அதுவே பழகிவிட்டது. இன்றைக்கு பல குழந்தைகள் செல்போன் இல்லாமல் சாப்பிட மறுக்கிறார்கள். அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் பார்வைக்குறைபாடு ஏற்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கண் பரிசோதனை செய்ய அழைத்துச் செல்கின்றனர்.
டாக்டர்களின் பரிந்துரைக்கு ஏற்ப கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். சரியான உணவு பழக்க வழக்கமும் குழந்தைகளிடம் இருப்பது இல்லை. துரித உணவுகளை விரும்பும் குழந்தைகள், காய்கறி, பழங்களை விரும்புவதில்லை. தினமும் ஒரு பழம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடும் போது பார்வைக்குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதனை செய்யும் போது, அதற்கேற்றாற்போல் 'பவர் கிளாசை' மாற்றிக் கொள்வதும் அவசியம். கண்கள் விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடக்கூடாது' என்றார்.
விழிப்புணர்வு வேண்டும்
தேனியை சேர்ந்த கல்வியாளர் ஜெகநாதன் கூறும்போது, 'கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை விட தற்போது கண்ணாடி அணிந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. அதற்கு செல்போன் பயன்பாடு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. செல்போன் பார்க்கும் போது கண்களை சிமிட்டும் நேரம் மிகவும் குறைவு. அது கண்களுக்கு பாதிப்பை கொடுக்கும். அதுபோல் ஊட்டச்சத்து குறைபாடும் முக்கிய கரணம்.
குழந்தைகள் துரித உணவுகளை அதிகம் விரும்புகின்றனர். காய்கறி, பழங்களை விரும்புவதில்லை. தினம் ஒரு பழத்தை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மீன், கேரட் போன்றவை அதிகம் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பில் காட்டும் அக்கறையை போல், அவர்களின் உடல் நலனிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்' என்றார்.
பாதுகாப்போம்
ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.