இளம் வாக்காளர்களை அதிகளவில்சேர்க்க வேண்டும் :கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


இளம் வாக்காளர்களை அதிகளவில்சேர்க்க வேண்டும் :கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:34+05:30)

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு தொடங்கிய பேரணிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை ரோட்டில் சென்று குரூஸ்பர்னாந்து சிலை அருகே முடிவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர். மேலும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இளம் வாக்காளர்கள்

தேசிய வாக்காளர் தினம் இளம் வாக்காளர்களை அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நாளான ஜனவரி 25-ந் தேதி வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெறும்.

ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தில் இளம் வாக்காளர்கள் கவுரவிக்கப்படுவார்கள். வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும். அடுத்த ஆண்டு 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவர் அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், தாசில்தார்கள் செல்வக்குமார் (தூத்துக்குடி), ரகு (தேர்தல்) மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story