சுதந்திர தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
சுதந்திர தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அன்னவாசல்:
குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு கல்லூரி முதல்வர் நக்கீரன் தலைமை தாங்கினார். முதலாவதாக சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக விழிப்புணர்வு ஊர்வலம் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் முன்னிலையில் வேளாண்மை கல்லூரி முதல் குடுமியான்மலை வரை நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் தேசியக்கொடி ஏந்தி வந்தே மாதரம் என முழக்கமிட்டு கலந்து கொண்டனர். சுதந்திர திருநாள் அமுத பெருவிழா சார்பில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் சாதனை பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கொண்டாட்டத்தை அடிப்படையாக கொண்டு கல்லூரி நுழைவுவாயில் முன்பாக "சுதந்திர வனம்" என்ற நிகழ்வில் மரக்கன்று நடவு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ரத்ததானம் வழங்கினர். பின்னர் கல்லூரி மாணவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குருநாதன் நன்றி கூறினார்.