மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில், கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலை 9.05 மணிக்கு சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் கலெக்டர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார். அதன்பின்னர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்குகிறார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வெடிகுண்டு சோதனை
இதையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நேற்று மாலை 6 மணி முதல் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் மைதானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1,400 போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.