தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் யூனியன் தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். பின்னர் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அறம் செய் குழுவின் சார்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இருக்கைகளை எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பாரதிசங்கர், பொன் பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் சித்துராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சுந்தரவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

எட்டயபுரம்

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மல்லிகா தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாரின் சிலைக்கு தாசில்தார் மல்லிகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசிய கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாரதி இல்லத்தில் நடந்த விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.இதில் பாரதி இல்ல காப்பாளர் ரமாதேவி மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்வாரிய அலுவலகம்

மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சங்கர் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆக்க முகவர் குமார், மேற்பார்வையாளர் பாரதி, கம்பியாளர்கள் முத்துராமலிங்கம், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் டாக்டர் நாராயணமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ராம்குமார் ராஜா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனிக்குமார் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

நடுவிற்பட்டி

எட்டயபுரம் நடுவிற்பட்டி மாரியப்பா நாடார் நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினால்டுசேவியர் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளிச் செயலாளர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார்.

கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாப்திஸ்து பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். குமாரகிரி புதூர் சி. கே. டி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் நம்மாழ்வார் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

எட்டயபுரம் நடுவிற்பட்டியிலுள்ள வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் தலைவர் ராஜா தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் அய்யனார், துணைத் தலைவர் வெங்கடேஷ் ராஜா, பொருளாளர் பரமசிவம், சங்க குமாஸ்தா அய்யனார் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கீழஈரால்

கீழ ஈரால் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் பச்சை பாண்டியன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

டி.சண்முகபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவர் செல்வ விநாயகமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். துணைத்தலைவர் ஓவுராஜ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காயல்பட்டினம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு காயல்பட்டினம் நகரசபை அலுவலகத்தில் தேசியக் கொடியை தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகமது ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் நகரசபை ஆணையாளர் பாலசிங், துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில், 22 -23-ஆம் ஆண்டில் 89 சதவீத வீட்டு வரி மற்றும் வரிகளை வசூல் செய்த வரி வசூலிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலைவர் பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நகரசபை உறுப்பினரும் தமிழக வணிகர் நல வாரிய உறுப்பினருமான எஸ். பி.ஆர்.ரங்கநாதன் என்ற சுகு, மற்றும் உறுப்பினர்கள் கதிரவன், அஜ்வாது, மெய்தீன், ராமஜெயம், செய்யது ஆசியா முத்து சையது பாத்திமா, ரசிதா பீவி, நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் கலிலூர் ரஹ்மான், நகர துணை செயலாளர் நவ்பல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முத்துகுமார் நன்றி கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவன் சுல்தான் லெப்பை காதர், பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயார் செய்து காட்சிபடுத்தினார். அவருக்கு நகரசபை தலைவர் சிறப்பு பரிசு வழங்கினார்.


Next Story