நாளை சுதந்திர தின விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார்
77-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
சென்னை,
நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார்.
விழா மேடையில், 'தகைசால் தமிழர்' விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின், வழங்குகிறார்.
சாதனையாளர்களுக்கு விருது
டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில்வழங்கி கவுரவிக்கிறார்.
முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு முப்படை அதிகாரிகளை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.
முதல்-அமைச்சர் கொடி ஏற்றுகிறார்
இதன்பின்பு முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.
பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும். இடத்துக்கு முதல்-அமைச்சர் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துவார்.
இதன்பின்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் செய்துள்ளனர்.