நாளை சுதந்திர தின விழா: வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடியை ஏற்றினர்


சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டையில் வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடியை ஏற்றினர்.

புதுக்கோட்டை

தேசிய கொடியை ஏற்றினர்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 13, 14, 15-ந் தேதிகளில் பொதுமக்கள் தேசிய கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் செய்தனர். கலெக்டர் கவிதாராமு தனது முகாம் அலுவலகத்தில் நேற்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ராகவி தேசிய கொடியை ஏற்றினார்.

இதேபோல் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். பா.ஜனதாவினர் சிலர் தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கினர்.

ஆயுதப்படை மைதானம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வருகிறது. அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இலுப்பூரில் உள்ள கால்நடை பராமரிப்புதுறை அலுவலகத்தில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அன்னவாசல் கோல்டன்நகர் அங்கன்வாடியில் பேரூராட்சி தலைவர் பொன்னம்மா மதுரம் தேசிய கொடி ஏற்றினார். இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நாட்டு படகுகள்

மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட மீன்பிடி நாட்டுப்படகுகளில் மீனவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். இதேபோல் அரிமளம் ஒன்றியம் கடையக்குடி ஊராட்சி இந்திரா நகர் நரிக்குறவர் வீடுகளில் மத்திய- மாநில அரசுகளின் உத்தரவின்படி வீடுகள் தோறும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. விராலிமலையில் பா.ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விராலிமலை மேற்கு ஒன்றிய தலைவர் சுந்தரம் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது காமராஜர் நகரில் தொடங்கி கடைவீதி, சோதனைச்சாவடி வழியாக சென்று மீண்டும் காமராஜர் நகரில் நிறைவடைந்தது. கீரனூர் பகுதிகளில் அனைத்து வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி பறக்க விடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story