சுதந்திர தினவிழா: சேலத்தில் நாளை கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார்


சுதந்திர தினவிழா: சேலத்தில் நாளை கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார்
x

சேலத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கார்மேகம் தேசிய கொடியேற்றுகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.

சேலம்

சுதந்திர தினவிழா

75-வது சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இதனிடையே மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடிகளை நேற்று முதல் பறக்க விட தொடங்கினர். மேலும் கடைகள், வணிக நிறுவனங்களிலும் தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

கலெக்டர் கொடி ஏற்றுகிறார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 9.05 மணியளவில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொள்கிறார். இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கவுரவிக்க உள்ளார்.

பின்னர் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் போலீசாரின் ஒத்திகை நடைபெற்றது. மேலும் சுதந்திர தினவிழா நடைபெறும் காந்தி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி உள்ளிட்டவை மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story