திருவாரூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கொரடாச்சேரி;
சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருந்தரக்குடி ஊராட்சியில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவதுசுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும். இதன்மூலம் கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். பள்ளி அருகாமையில் உள்ள கடைகளில் போதைப்பொருள் இல்லாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.குழந்தைகள், மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சினை இருந்தால் 1098 என்ற சைல்டு லைன் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், ஊராட்சிமன்ற தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் சுதந்திர தின கிராம சபைகூட்டம், ஊராட்சி தலைவர் ஏ. எம். மோகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி சின்னப்பா, கிராம நிர்வாக அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய 14 மற்றும் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த தீர்மானம், தமிழக அரசின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சிறப்பு தீர்மானம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சீதக்கமங்கலம் ஊராட்சி
குடவாசல் ஒன்றியம் சீதக்கமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சரத்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.52 புதுக்குடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதைப்போல மஞ்சக்குடி, சிமிழி, பிரதாமராமபுரம் செருகளத்தூர், ராதாநல்லூர், விக்கிரபாண்டியம், சேதனிபுரம், கூந்தலூர் கடலங்குடி 18 புதுக்குடி தேதியூர், மணவாளநல்லூர், விஷ்ணுபுரம், வடுகக்குடி, திருவீழிமிழலை, திருவிடைசேரி, பருத்தியூர், பெரும்பண்ணையூர், வயலூர், அன்னியூர், சிறுகுடி, திருப்பாம்புரம், ஆலத்தூர், கூத்தனூர், சரோபதிராஜபுரம், அதம்பார் உள்ளிட்ட 49 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூரில் ஊராட்சி தலைவர் சந்திரா அன்பழகன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் கீதாரெத்தினம், ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், வட்டாரவளர்ச்சி அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.