இந்தியா-அமெரிக்க போர்க்கப்பல்கள் நடுக்கடலில் கூட்டு பயிற்சி
கடல்சார் பாதுகாப்பினை மேம்படுத்துவது குறித்து சென்னையில் இந்தியா மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் இணைந்து நடுக்கடலில் கூட்டு பயிற்சி மேற்கொண்டன. தனது 4 நாட்கள் நட்புறவு பயணத்தை அமெரிக்க போர்க்கப்பல் ‘மிட்ஜெட்' நிறைவு செய்தது.
சென்னை,
அமெரிக்க கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 'மிட்ஜெட்' என்ற போர்க்கப்பல் நட்புறவு பயணமாக கடந்த 16-ந் தேதி சென்னைக்கு வந்தது. தனது பயணத்தின் 4-வது நாளான நேற்று இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை கப்பல் இணைந்து நடுக்கடலில் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டன.கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடும் படகு மற்றும் கப்பல்களில் புகுந்து எவ்வாறு அவர்களை மடக்கி பிடிப்பது, கடல்சார் சட்ட அமலாக்க கடமைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றுவது குறித்தும், தத்தமது நாடுகளில் பயன்படுத்தப்படும் திறன்கள் குறித்தும் வீரர்கள் பகிர்ந்துகொண்டனர்.
கடற்கொள்ளையர்கள்
2 நாடுகளின் படை வீரர்களும் இணைந்து செயல்பட்டு, கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கிக்கொண்ட படகு, கப்பல்களை மீட்டு, அதில் உள்ளவர்களை எப்படி பத்திரமாக கரைக்கு கொண்டுவருவது? கடல்சார் பாதுகாப்புக்கு எதிராக பின்னப்படும் பல்வேறு சூழ்ச்சிகளை எப்படி முறியடிப்பது? என்பது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இதேபோல, கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை 2 நாடுகளும் இணைந்து எப்படி ஒழிப்பது? கப்பலில் தீ பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது தொடர்பாக நடுக்கடலில் இந்தியா மற்றும் அமெரிக்க வீரர்கள் இணைந்து செயல்விளக்கம் செய்து பார்த்தனர். இது கண்களை கவரும் வகையில் பிரமிப்பாக இருந்தது.
பயணம் நிறைவு
'மிட்ஜெட்' போர்க்கப்பல் தனது 4 நாட்கள் பயணத்தை நேற்று நிறைவு செய்தது. தனது பயணத்தின்போது, தேடுதல், பறிமுதல் என்று கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப யுக்திகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நட்புறவு வாலிபால் போட்டியும் நடந்தது.