அரசு அலுவலர்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலையில் அரசு அலுவலர்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னை கிளை அலுவலகம்-2 மூலம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய தர அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக இயக்குனரும், தலைவருமான ஜி.பவானி கலந்து கொண்டு அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
அதில் வெவ்வேறு துறைகளில் உள்ள பொருட்களின் தர நிலைகள் மற்றும் அதற்காக வழங்கும் ஐ.எஸ்.ஐ., பி.ஐ.எஸ். ஹால்மார்க் தரச்சான்றிதழ்களை பற்றியும், பொதுமக்களுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்பட்ட பொருட்கள் மற்றும் பி.எஸ்.ஐ. ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் உண்மை தன்மையை பி.எஸ்.ஐ. கேர் ஆப் என்ற செயலியின் மூலம் எவ்வாறு சரிபார்ப்பது என்பது பற்றியும் விரிவான விளக்கவுரை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெவ்வேறு துறைகளில் இருந்து அலுவலர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.