இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது


இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது
x

இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக நாகர்கோவிலில் நடந்த சி.ஐ.டி.யு. பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக நாகர்கோவிலில் நடந்த சி.ஐ.டி.யு. பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசினார்.

சி.ஐ.டி.யு. தொழிற் சங்க மாநாடு

சி.ஐ.டி.யு. 15-வது மாநில மாநாடு கடந்த 4-ந் தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் கன்னியாகுமரியில் நடந்தது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.ஐ.டி.யு. பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் நடந்த மாநாட்டை தொடர்ந்து நேற்று மாலையில் நாகர்கோவில் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய துணை தலைவர் ஹேமலதா மற்றும் துணைத்தலைவர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய பொருளாதாரம்

கூட்டத்தில் மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியபோது கூறியதாவது:-

இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒப்பந்த முறையைக் கொண்டு வந்து அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதது மிகவும் வேதனையாக உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். சிறு, குறு தொழிற்சாலைகள் பல மூடப்பட்டன. குமரியில் ரப்பர், முந்திரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஏதேதோ சொல்லி வருகிறார். அதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. கவர்னர்களின் பங்களிப்பு மாநிலங்கள் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். குமரியில் ரப்பர் டயா் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொட்டும் மழையில் பேரணி

கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் இருந்து நாகராஜா கோவில் திடல் வரை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது கொட்டும் மழையிலும் அவர்கள் கையில் குடைகளை பிடித்தப்படி சென்றனர்.

பேரணி மற்றும் பொதுகூட்டத்தில் அகில இந்திய செயலாளர் கருமலையான், மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன், மாநில செயலாளர் ஆறுமுக நாயினார், மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் செலஸ்டின், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின் மற்றும் நிர்வாகிகள் தங்கமோன், சிங்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story