இலங்கைக்கான இந்திய வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் - இலங்கை தமிழ் எம்.பி. மனோ கணேசன் பேட்டி
இலங்கைக்கான இந்திய வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் என்று இலங்கை தமிழ் எம்.பி. மனோ கணேசன் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சியில் இந்திய வம்சாவளி தாயகம் திரும்பிய மலையக தமிழக மக்கள் நிலை மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், இலங்கை தமிழ் எம்.பி.யுமான மனோ கணேசன் பங்கேற்று கலந்துரையாடினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா மற்றும் இலங்கையில் 40 லட்சம் மலையக தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் அனைவரையும் மத்திய, மாநில அரசுகள் அரவணைக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமூக நீதிக்கொள்கை இலங்கையின் மலையக தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும்.
கடந்த 75 ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கொள்கை தோல்வியடைந்துவிட்டது. இலங்கை அரசு, இந்தியாவுடன் நட்புறவுடன் செயல்பட வேண்டுமென்பதற்காக மலையக தமிழர்களை பிரித்தது, கச்சத்தீவை வழங்கியது போன்ற பல செயல்களை இந்திய அரசு செய்தது. ஆனால் இலங்கை அரசு, இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. எனவே, இந்திய அரசு, இலங்கையின் வெளியுறவு கொள்கையை மறுபரிசீலனை செய்து, இந்தியாவின் தோழர்களான இலங்கையின் மலையக தமிழர்கள், ஈழத் தமிழர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய வெளியுறவுக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது இலங்கையில் சீனாவின் கை ஓங்கியுள்ளது. இந்தியாவின் இலங்கை கொள்கை படுதோல்வி அடைந்து விட்டது. சிங்கள பேரினவாதிகள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியடைய மாட்டார்கள். இலங்கையின் மலையக தமிழர்கள், ஈழத்தமிழர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.
இது தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினையும் சந்தித்து பேசுவேன். தமிழகத்தில் உள்ள டான்டீ நிறுவனத்தை தமிழக அரசு விற்க முயற்சி செய்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். இலங்கை - இந்திய மலையக மக்களை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இலங்கை மலையக தோழமை இயக்கம் ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.