ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.
பாபநாசம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையிலும், கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையிலும் நடந்தது. இந்த ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 122 லாட் பருத்தி ஏலத்திற்காக கொண்டுவரப்பெற்றது. மொத்த தாட்டுகளின் எண்ணிக்கை 222 ஆகும். மொத்தம் 186 குவிண்டால் பருத்தி ஏலத்துக்கு எடுத்து வந்தனர்.
ஒரு குவிண்டால் ரூ.11,289
கும்பகோணம், பண்ருட்டி மற்றும் செம்பனார்கோவில் பகுதிகளை சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி மதிப்பு சராசரியாக ரூ.19 லட்சத்து 10 ஆயிரத்து 34 ஆகும். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ஒரு குவிண்டால் ரூ.11,289-க்கு விலைேபானது. குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டால் ரூ.8,869. சராசரி மதிப்பு ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 269 ஆகும்.
பின்னர் தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ்பாபு கூறியதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சை விற்பனை குழுவிற்கு உட்பட்ட கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் மூலம் நடப்பு ஆண்டு பருத்தி மறைமுக ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த ஏலத்தின்போது பருத்தி கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்தினர். உள்ளூர் மற்றும் பிறமாவட்ட பருத்தி வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எனவே பருத்தி விவசாயிகள் பருத்தியை தங்கள் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாட்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்ய வேண்டும்.
அதிகபட்ச விலை
இந்த மறைமுக ஏலமானது ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முறையே கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும்.விவசாயிகள் அதிகபட்ச விலை கிடைக்க ஏதுவாக தங்கள் பருத்தியை நன்கு நிழலில் உலர வைத்து தூசு போன்றவற்றை நீக்கி தரமான பருத் தியை விற்பனைக்கு கொண்டு வந்து நல்ல விலையை பெற்று பயன் பெறலாம். விவசாயிகளிடம் இருந்து பருத்தி மட்டுமல்லாது உளுந்து, பச்சைப்பயறு ேபான்ற விளைபொருட்களும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.