டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் போராட்டம்
செய்யாறு அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் போராட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது.
செய்யாறு
செய்யாறு அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் போராட்டத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது.
ேபாராட்டம்
செய்யாறு தாலுகா பாராசூர் கிராமத்தில் செய்யாறு ஆரணி -பிரதான சாலையில் பாராசூர் கூட்ரோடு சந்திப்பில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை அகற்றக்கோரி பாராசூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் டாஸ்மாக் கடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த கடையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மது வாங்கி குடித்துவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெற்றோரின்றி பல பிள்ளைகள் தவித்து வருகின்றனர்.
மேலும் இன்று குடிபோதையில் மோட்டாா்சைக்கிளில் சென்றதால் தான் சிறுமியும், முதியவரும் இறந்தனர். எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும். கடையை மூடும் வரை அங்கேயே உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று கூறினார்.
தற்காலிகமாக மூடல்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடையை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி முறையாக கோரிக்கை மனு அளித்தால் அதன்மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி, அப்பகுதியில் இருந்து அழைத்துச்சென்றனர்.
மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க போலீசார் டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து கடையை மூடி பூட்டிக்கொண்டு சென்றுவிட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மனோகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதி மக்களின் நலனுக்காக டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி துணைக்கு யாரும் வராதபோதிலும் தனிமனிதனாக போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிகமாக டாஸ்மாக் கடையை மூட செய்த மணிகண்டனை பொதுமக்கள் பாராட்டினர்.