தஞ்சை பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்


தஞ்சை பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்
x

தஞ்சை பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்

தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் சன்னதி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சன்னதியில் இருந்த கற்சிலை மாயமாகி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன.

போலீசார் திடீர் ஆய்வு

அதன் அடிப்படையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீசார் வந்து கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். இதனால் பெரியகோவில் வளாகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.

பரபரப்பு

இந்திரன் சிலை தொடர்பாக இன்னும் 2 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன்பிறகே சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரிய வரும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

தஞ்சை பெரிய கோவிலில் சிலை மாயமானதும், இதனால் கோவிலுக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story