கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களான 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 5-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
13 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வுகூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம். கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் சில திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன.
தலைமைச்செயலகம் உழைக்கும் முதன்மை செயலமாக மாறி உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதம், திட்டத்திற்கான செலவினத்தை அதிகரிக்கும். திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். திட்ட பணிகளை துரிதமாகவும், தரமாகவும் நிறைவேற்றிட வேண்டும். திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மழை வெள்ளத்தால் தத்தளித்த சென்னை மாநகரம் தற்போது பெருமழை வந்தாலும் பாதிக்கப்படாது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மனந்திறந்து பாராட்டியதை நினைவுகூர்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசுப்பணிகள் சுனாமி வேகத்தில் நடந்து வருகின்றன. அரசு பணிகள் சுனாமி வேகத்தில் கூட நடைபெறும் என்பதை நாம் சில திட்டங்களை செயல்படுத்தி காட்டி இருக்கிறோம். மதுரையில் கலைஞர் கருணாநிதியின் பெயரில் நூலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மையாக மாநிலமாகவும், வளமான மாநிலமாகவும் மாற்றிட வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் போன்ற உயரிய லட்சியத்தோடு வீருநடை போட்டு கொண்டிருக்கும் நமது அரசுக்கு அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பு என்றென்றும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.