விவசாயிகளிடம் தரமான பச்சை தேயிலையை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்ய வேண்டும்
விவசாயிகளிடம் தரமான பச்சை தேயிலையை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
ஊட்டி
விவசாயிகளிடம் தரமான பச்சை தேயிலையை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தரமான பச்சை தேயிலை கொள்முதல் செய்வது மற்றும் தேயிலைத்தூள் விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடன் இன்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்னிந்திய தேயிைல வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், திட்ட இயக்குனர்(சிறப்பு பகுதி மேம்பாடு) மற்றும் இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர்(பொ) டாக்டர் மோனிகா ராணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபடியான மக்கள் தேயிலை தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த தொழில் நலிவடைந்து வந்த காரணத்தால், கடந்த ஜூலை மாதம் கூட்டம் நடத்தி, அதிக லாபத்தை ஈட்டும் வகையில் பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தரமான பச்சை தேயிலை
இதைத்தொடர்ந்து ஜூலை மாதத்தில் பச்சை தேயிலைக்கு கிலோ ரூ.12.82, ஆகஸ்டு மாதத்தில் ரூ.14.38, செப்டம்பர் மாதத்தில் ரூ.15.82, அக்டோபர் மாதத்தில் ரூ.16.21 என விலை உயர்வாக கிடைத்தது. இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டபோது, பச்சை தேயிலை உற்பத்திக்கு கிலோ ரூ.22 விலை என்று தெரிவித்தனர். எனவே படிப்படியாக நல்ல விலை கிடைக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகள் தரமான பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தரமான பச்சை தேயிலையை விவசாயிகளிடம் இருந்து பெற வேண்டும். தரமான பச்சை தேயிலையை கொள்முதல் செய்து, தரமான தேயிலைத்தூளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதை போன்று, தேயிலை தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற தேயிலைத்தூள் இருக்கும் பட்சத்தில் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்கோ சர்வ் தொழிற்சாலைகளிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
முழு ஒத்துழைப்பு
இனிவரும் காலத்தில் தேயிலை தொழிலை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர அரசால் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்கோசர்வ் தேயிலை தொழிற்சாலையில் தேயிலைத்தூள் பேக்கிங் செய்வதையும், அதன் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார்.
இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், இன்கோ சர்வ் பொது மேலாளர்(குன்னூர்) குமரகுருபன், துணை பொது மேலாளர்கள் சங்கர நாராயணன், பரணி, குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் தேயிலை விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.