ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பச்சிளங்குழந்தை திடீர் சாவு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பச்சிளங்குழந்தை திடீர் சாவு
x

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பச்சிளங்குழந்தை திடீரென இறந்தது. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பச்சிளங்குழந்தை திடீரென இறந்தது. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண் குழந்தை

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த எஸ்.பி.எம். தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது34). இவருடைய மனைவி முத்துகனி (32). இவர்களுக்கு 7 வயதில் ரஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் முத்துகனி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். அவரை பிரசவத்திற்காக தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 7-ந் தேதி சேர்ந்தனர். பின்னர் 8-ந் தேதி முத்துக்கனிக்கு அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் எடை 3 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை முத்துக்கனியின் அக்காள் முத்துச்செல்வி குழந்தையை தூக்கினார். அப்போது குழந்தை எந்த வித அசைவில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

இதுகுறித்து உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியரிடம் தகவல் தெரிவித்தார். குழந்தையை பரிசோதித்த போது இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவர்கள் சரிவர பணியில் ஈடுபடாமல், ஊழியர்கள் மட்டுமே இருந்து வந்ததாக குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டி தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசில் புகார்

பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து முத்துச்செல்வி அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார், குழந்தை எப்படி இறந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story