போலீசாரின் சாதி குறித்த தகவல்களை அளிக்க முடியாது
போலீசாரின் சாதி குறித்த தகவல்களை அளிக்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ரூபா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நானும், என் கணவரும் சாலையோர வியாபாரம் செய்து வருகிறோம். நெல்லை தனிப்பிரிவு போலீசார் எங்களின் வியாபாரத்தில் அடிக்கடி இடையூறு செய்கின்றனர். எனவே அந்த தனிப்பிரிவு போலீசாரின் சாதி உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டு விண்ணப்பித்தேன். போலீசார் சம்பந்தப்பட்ட தகவல்களை தர மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து தகவல் அறியும் ஆணையத்தில் 2-வது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். எனவே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் நான் கேட்ட விவரத்தை தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் போலீசாரின் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை கேட்கிறார். இது தனிப்பட்ட உரிமையை மீறும் வகையில் உள்ளது. இதை வெளிப்படையாக அளிக்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.