வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி?வேளாண் அதிகாரி தகவல்
வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி? என வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்தார்
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துப்பயிர்கள் மற்றும் தென்னை ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தின் சில வட்டாரங்களில் நெல் மற்றும் பிற பயிர்கள் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் வறட்சியால் பாதிப்படையும் நிலையில் உள்ளது. ஆதலால் பயிர்களில் பின்வரும் வறட்சி மேலாண்மை தொழில் நுட்பங்களை கையாண்டு பயிர்களை பாதுகாத்திடலாம். நெல்பயிர்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற பொட்டாசியம் குளோரைடு கரைசலை 1 சதவீதம் என்ற அளவில் இலை வழியாக தெளிக்கலாம். நெற்பயிரில் பூ பூக்கும் மற்றும் கதிர் உருவாகும் பருவத்தில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க பி.பி.எப்.எம். 500 மி.லி.எக்ேடருக்கு என்ற அளவில் இலைவழியாக தெளிக்கலாம்.
உளுந்து மற்றும் பச்சைப் பயறுகளில் வறட்சி காலத்தில் உளுந்தில் 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 மி.லி. பி.பி.எம். போரான் கரைசலை இலைவழியாக தெளித்து வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்கலாம். பச்சைப் பயிரில் 1 சதவீதம் யூரியா கரைசலை பூக்கும் பருவத்திற்கு முன்னும், பூக்கும் பருவத்திலும் இலை வழியாக தெளித்து வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்கலாம்.
இதுபோல் நிலக்கடலையில் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்க 0.5 சதவீதம் பொட்டாசியம் குளொரைடு கரைசலை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் தெளிக்கலாம். தென்னையில் சொட்டு நீர்பாசன முறையினை கடைபிடித்து உதிர்ந்த தென்னை மட்டைகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் மூலம் வேர் பகுதிகளில் மூடாக்கு அமைத்து மரங்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.