கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பு:பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து இழப்பீட்டு தொகை பெறலாம்கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பது தொடர்பான தனிநபர் நேரடி பேச்சுவார்த்தைக்கு நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து இழப்பீட்டு தொகை பெறலாம் நாகை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பது தொடர்பான தனிநபர் நேரடி பேச்சுவார்த்தைக்கு நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து இழப்பீட்டு தொகை பெறலாம் நாகை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
நாகை அருகே பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 2-ம் அலகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்க பணிக்கு, நாகை வட்டம் பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய கிராமங்களில் மொத்தம் 613.525 ஏக்கர் நில எடுப்பு செய்ய தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நில எடுப்பிற்குட்படும் 520 நில உரிமையாளர்களில் தனிநபர் நேரடி பேச்சுவார்த்தை முறைக்கு தானாக முன்வந்து சுய விருப்பத்தின்பேரில் சம்மதம் தெரிவித்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 222 நில உரிமையாளர்களுக்கு ரூ.65.89 கோடி வழங்கப்பட்டு 273.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இழப்பீடு
மேலும் கடந்த 9.3.2023 முதல் 17.3.2023 வரை நடந்த விசாரணைக்கு ஆஜராகி நேரடி பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவிக்காத மற்றும் விசாரணைக்கு ஆஜராகாத 131 நில உரிமையாளர்களின் 137.575 ஏக்கர் நிலம் நில எடுப்புச் சட்டத்தின்கீழ், நில மதிப்பு நிர்ணயம் செய்து தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 17.7.2023 முதல் 19.7.2023 வரை நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகாத 167 நில உரிமையாளர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் தனி நபர் நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து இழப்பீட்டு தொகையை பெற்று கொள்ளலாம்.
அவ்வாறு இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாத நிலையில், நில எடுப்பு சட்டத்தின்கீழ், நிலத்தை கையகப்படுத்தி இறுதி தீர்வாணை பிறப்பிக்கப்படும். நில எடுப்பு சட்டத்தின்படியும், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு தீர்ப்புகளின்படியும் நில எடுப்பு விவரம் அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் மொத்த நில எடுப்பு பரப்பு நிலமும் எவ்வித வில்லங்கமும் இன்றி, அரசின் வசமான நிலம் என்பதால், அரசிதழில் குறிப்பிட்டுள்ள புலங்களில் சாகுபடி அல்லது இதர ஆக்கிரமிப்புகள் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.