சித்த மருத்துவ நூல்களை இந்தியில் மொழி பெயர்க்க நடவடிக்கை திருச்சியில் மத்திய மந்திரி பேட்டி


சித்த மருத்துவ நூல்களை இந்தியில் மொழி பெயர்க்க நடவடிக்கை திருச்சியில் மத்திய மந்திரி பேட்டி
x

சித்த மருத்துவ நூல்களை இந்தியில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சியில் மத்திய மந்திரி முன்ச்பரா மகேந்திரபாய் கூறினார்.

திருச்சி

சித்த மருத்துவ நூல்களை இந்தியில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சியில் மத்திய மந்திரி முன்ச்பரா மகேந்திரபாய் கூறினார்.

கருத்தரங்கு

6-வது சித்த மருத்துவதினத்தையொட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு திருச்சி கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக்குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழக அரசின் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, இந்திய ஆயுஷ் அமைச்சக இணை மந்திரி முன்ச்பரா மகேந்திரபாய், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயுஷ்துறை சிறப்பு கவனம்

கருத்தரங்கில் மத்திய மந்திரி முன்ச்பரா மகேந்திரபாய் பேசுகையில், "உணவின் முக்கியத்துவம் பல தமிழ் இலக்கியங்களிலும், சித்த இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து பல வழிகாட்டல்கள் சித்த மருத்துவமுறையில் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவமுறை சிறந்ததாக உள்ளதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சித்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆயுஷ்துறை சிறப்பு கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தேசிய சித்தா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் அந்த நிறுவனத்தில் இளங்கலை சித்தா படிப்பு தொடங்கப்பட உள்ளது" என்றார்.

வேலைவாய்ப்பு

கருத்தரங்கில் திருநாவுக்கரசர் எம்.பி. பேசுகையில், மத்திய அரசு சித்தா தினத்தை தேசிய சித்தா தினமாக கொண்டாட வேண்டும். சித்த மருத்துவம் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். சித்த மருத்துவ முறைகளை இந்தி உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். எய்ம்ஸ் சித்தா கல்லூரியை திருச்சியில் தொடங்க வேண்டும்" என்றார்.

இதில் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பிரமோத்குமார் பதக், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மொழி பெயர்க்க நடவடிக்கை

இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி முன்ச்பரா மகேந்திரபாய் நிருபர்களிடம் கூறுகையில், "ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக இந்திய சித்த மருத்துவ முறைகள் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. சித்த மருத்துவ பலன்களை இந்திய மக்கள் உணர தொடங்கியுள்ளனர். சித்த மருத்துவமுறைகளை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் சித்த மருத்துவ நூல்களை இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்த கோரிக்கை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.


Next Story