காயம் அடைந்த ராணுவ வீரரின் கோரிக்கையானது அரிதிலும் அரிதான வழக்கு: அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டுக்கு தேவை- மதுரை ஐகோர்ட்டு கருத்து


காயம் அடைந்த ராணுவ வீரரின் கோரிக்கையானது அரிதிலும் அரிதான வழக்கு:    அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டுக்கு தேவை- மதுரை ஐகோர்ட்டு கருத்து
x

அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டுக்கு தேவை என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை


அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டுக்கு தேவை என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

பயிற்சி கல்லூரியில் விபத்து

மதுரையைச் சேர்ந்த அஜய் ஜஸ்டிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பிளஸ்-2 முடித்துவிட்டு 2007-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தேன். அங்குள்ள பயிற்சி கல்லூரியில் 2009-ம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எனக்கு கழுத்து மற்றும் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை சரியாக செய்யப்படாததால் மேலும் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு 4 வாரம் மருத்துவ விடுமுறையில் இருந்தேன்.

இந்தநிலையில் பணப்பலன், மாத உதவித்தொகை வழங்கி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். அதன் பிறகு என்னை பணியில் சேர்க்கவில்லை. நான் தொடர்ந்து பணியாற்றும் வகையில் மாற்றுப்பணி, இழப்பீடு அல்லது ஓய்வு பெற்ற ராணுவவீரர் அந்தஸ்து வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

உதவித்தொகை பெறுகிறார்

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, மனுதாரர் வழக்கு நிலுவையில் இருந்த போது சட்டப்படிப்பு முடித்து உள்ளார். இதனால் ராணுவத்தில் உள்ள அட்வகேட் ஜெனரல் பணிக்கு மனுதாரரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

மத்திய அரசு வக்கீல் விக்டோரியா கவுரி ஆஜராகி, மனுதாரரும், அவரது பெற்றோரும் ராணுவ விதிகள் மற்றும் ஒப்பந்தத்தை மீறி வேறு எந்த சலுகையும் கேட்கமாட்டோம் என உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளனர். மனுதாரருக்கு பணப்பலன் வழங்கப்பட்டு உள்ளது. இப்போது வரை மாத உதவித்தொகை பெற்று வருகிறார். அவருக்கு மாற்றுப்பணி வழங்க முடியாது, என்றார்.

அர்ப்பணிப்பு உணர்வு

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் கோரிக்கையானது, இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது கனவு மற்றும் ஆர்வத்தை காட்டுகிறது. நாட்டிற்காக சேவை செய்யவும், நாட்டை பாதுகாக்கும் கனவுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பவர்கள் நாட்டிற்கு தேவை. இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்காக மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கலாம்.

எனவே மனுதாரரின் சட்டப்படிப்பை கருத்தில் கொண்டு அவரை அட்வகேட் ஜெனரல் திட்டத்தில் சேர்க்கவும், இதற்காக நிபந்தனைகளை தளர்த்தவும் பரிசீலிக்க வேண்டும். மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத்தில் கொண்டு மனுதாரர், ராணுவத்தில் ஜே.ஏ.ஜி. திட்டத்தில் சேர்க்கப்படுவார் என இந்த கோர்ட்டு நம்புகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story