விபத்தில் காயம் அடைந்த ஆசிரியை பரிதாப சாவு
சேதுபாவாசத்திரம் அருகே நடந்த வேன் விபத்தில் காயம் அடைந்த ஆசிரியை இறந்தார்.
சேதுபாவாசத்திரம் அருகே நடந்த வேன் விபத்தில் காயம் அடைந்த ஆசிரியை இறந்தார்.
சுற்றுலா வந்தபோது விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாசி பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து 6 மாணவ, மாணவிகளுடன் பள்ளி தாளாளர் செய்யது முகமது(வயது 35), ஆசிரியைகள் கார்த்திகா, சத்தியா ஆகியோர் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவை சுற்றிப்பார்க்க வந்தனர்.
கடந்த 29-ந் தேதி ஒரு வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் வந்தனர். வேனை பள்ளி தாளாளர் செய்யது முகமது ஓட்டினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வலது புறமாக மனோராவிற்கு திரும்பியபோது எதிர்பாராதவிதமாக எதிரே மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடி சென்றுகொண்டிருந்த காரும், வேனும் மோதிக்கொண்டன.
ஆசிரியை சாவு
இதில் வேனை ஓட்டி வந்த பள்ளி தாளாளர் செய்யது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சத்தியா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்த அவர்கள் 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பள்ளி தாளாளர் செய்யது முகமது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.பலத்த காயம் அடைந்த ஆசிரியைகள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திகா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியாவுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.