விவசாயிகளைக் குறி வைத்து நூதன மோசடி


விவசாயிகளைக் குறி வைத்து  நூதன மோசடி
x

விவசாயிகளைக் குறி வைத்து நூதன மோசடி

திருப்பூர்

போடிப்பட்டி

ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட மோசடியைப் போல விவசாயிகளைக் குறி வைத்து நூதன மோசடி அரங்கேறி வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏமாற்று வித்தைகள்

ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் அவர்களுடைய ஆசையைத் தூண்ட வேண்டும் என்பது சதுரங்க வேட்டை திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட வசனமாகும்.அதுபோல அடுத்தவர் பணத்தை விழுங்கி ஏப்பமிடும் வெறியுடன் சுற்றித் திரிபவர்கள் ஒருபுறம் என்றால் உழைக்காமலேயே பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையுடன் சுற்றுபவர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள்.இவர்களுக்கு இடையில் சுழலும் மாயச் சக்கரமாக புதுப்புது ஏமாற்று வித்தைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது.அந்தவகையில் தேக்கு மர வளர்ப்புத் திட்டம், சந்தன மர வளர்ப்பு, கண்வலி கிழங்கு வளர்ப்பு, மருந்து நறுமணச்செடிகள் வளர்ப்பு, முயல் வளர்ப்பு, டேட்டா என்ட்ரி, இரிடியம் சுரங்கம் என்று பலவிதமான மோசடிகள் அரங்கேறியுள்ளது. இதில் ஈமு கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு என்று பல திட்டங்களின் மூலம் விவசாயிகளின் உழைப்பும், பணமும் சுரண்டப்பட்டுள்ளது.இந்தநிலையில் தற்போது விவசாய நிலங்கள் குத்தகை என்ற பெயரில் நூதன மோசடி அரங்கேறி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குத்தகை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாய நிலங்கள் குத்தகை மூலம் அதிக லாபம் பெற முடியும் என்று விவசாயிகளின் ஆசையைத் தூண்டும் விதமாக சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் யாரும் ஏமாற்றப்பட்டார்களா என்பது குறித்து தெரியவில்லை.அந்த ஆடியோவில் பெண் ஒருவர் விவசாயி ஒருவரிடம் பேசும் அந்த ஆடியோவில் 10 ஏக்கர் பண்ணை நிலத்தில் விவசாயம் செய்ய இருப்பதாகவும், அதை தலா 22 சென்ட் என 40 பகுதிகளாகப் பிரித்து 22 சென்ட் நிலத்தை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வழங்குவதாகவும கூறுகிறார்.மேலும் அதில் நெல் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு விளையும் பொருட்களில் 70 சதவீதம் குத்தகைதாரருக்கே வழங்கி விடுவதாகவும் கூறுகிறார்.அத்துடன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குத்தகைத் தொகையை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரமாக திருப்பித் தருவதாகவும் உறுதி கூறுகிறார்.இன்றைய நிலையில் விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.இந்த சூழ்நிலையில் வெறும் 30 சதவீத விளை பொருட்களைக் கொண்டு அந்த நிறுவனத்தால் லாபம் ஈட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கவர்ச்சி விளம்பரம்

இதுபோலவே ஈமு கோழியின் முட்டையை ரூ 2 ஆயிரத்துக்கு வாங்கிக் கொள்கிறோம்.கறியை ஏற்றுமதி செய்கிறோம்.இறகுகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்று பல கவர்ச்சி விளம்பரங்களின் மூலம் விவசாயிகளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் அபகரிக்கப்பட்டது.அதேநிலை இந்த விளம்பரத்தின் மூலமும் ஏற்படலாம்.எனவே இந்த திட்டத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்'என்று விவசாயிகள் கூறினர்.

---

2 காலம் செய்திக்குள்படம்


Next Story