ரவுண்டானாவில் ராஜேந்திர சோழன் சிலை அமைக்க வலியுறுத்தல்
ரவுண்டானாவில் ராஜேந்திர சோழன் சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் நகர பா.ஜ.க. கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரியலூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அரசு மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். அரியலூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து ஏரி மற்றும் குளங்களையும் வண்டல் மண் எடுத்து தூர்வாருவதுடன், நீர் வழிப்பாதைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். அரியலூர் பஸ் நிலையத்தை விரைந்து முடித்து மக்களின் துயரத்தை நீக்க வேண்டும். அரியலூரில் தற்காலிக பஸ் நிலையத்தை சீர் செய்திட வேண்டும். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ராஜேந்திர சோழன் சிலை அமைக்க வேண்டும். சென்னை முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரெயிலை அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல முத்துநகர் விரைவு ரெயிலையும் அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் துறையின் ஆர்.எம்.எஸ். சேவையை அரியலூரில் மீண்டும் தொடங்கி நடத்திட வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மறு ஆய்வு செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் செந்தில் உள்பட ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.