வாடகை செலுத்தாததால் கல்லூரியை காலிசெய்ய வலியுறுத்தல்


வாடகை செலுத்தாததால் கல்லூரியை காலிசெய்ய வலியுறுத்தல்
x

சோளிங்கர் அரசு கல்லூரி இயங்கி வரும் கட்டிடத்திற்கு வாடகை செலுத்தாததால் கல்லூரியை காலிசெய்யும்படி கட்டிட உரிமையாளர் வலியுறுத்தி உள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

ராணிப்பேட்டை

அரசு கலை அறிவியல் கல்லூரி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கடந்த 2021-ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து சோளிங்கர் கீழாண்டை மோட்டூர் செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை வாடகைக்கு எடுத்து அரசு கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் தற்போது 1,350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரசு கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட கரிக்கல் மற்றும் ஜம்புகுளம் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்தனர்.

இதில் கரிகல் பகுதியில் 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ10 கோடியில் கட்டிடம் கட்ட பூமி பூஜை போட இருந்த நிலையில் நிறுத்தப்பட்டது. பிறகு ஜம்புகுளம் பகுதியில் கல்லூரி கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இடம் மேய்க்கால் புறம்போக்கு என்பதால் சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற்று பின்னர் அந்த இடத்திற்கு பதில் மாற்று இடம் தந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என துறை நிர்வாகம் அறிவித்தது. அதன்பேரில் மாற்று இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

காலி செய்ய வலியுறுத்தல்

ஆனால் அதற்குப்பிறகு அந்த பணிகள் ஏதோ சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் கட்டவில்லை. இந்தநிலையில் தற்போது கல்லூரி இயங்கி வரும் தனியார் கட்டிடத்தின் உரிமையாளர் தங்களுக்கு இதுவரை வாடகை செலுத்தவில்லை, அதனால் கல்லூரியை காலி செய்யுங்கள் என்று கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.

சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்

இது பற்றி சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத்திடம் கேட்டபோது சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 14 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி டிப்புக்காக திருத்தணி, அரக்கோணம் வாலாஜா சென்று படிக்க வேண்டும். அவர்களி வசதிக்காக அ.தி.மு.க. ஆட்சியில் சோளிங்கரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வதிலேயே மாவட்ட நிர்வாகம் உள்ளது.

தற்போது தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்திற்கான வாடகை கூட கட்ட வில்லை. கட்டிடத்திற்கு வாடகையாவது செலுத்தி மாணவர்கள் கல்வி பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் செய்ல்பட வேண்டும். இந்த ஆண்டாவது கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


Next Story