திருச்செங்கோடு அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு-சுகாதாரமான உணவு வழங்க காப்பாளருக்கு அறிவுறுத்தல்


திருச்செங்கோடு அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு-சுகாதாரமான உணவு வழங்க காப்பாளருக்கு அறிவுறுத்தல்
x

திருச்செங்கோடு அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என்று காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பள்ளிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருச்செங்கோடு வந்த அவர் தெப்பக்குளம் அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு மாணவிகள் விடுதிக்கு சென்றார். அங்கு பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகளிடம் வகுப்புகளில் நடத்தபடும் பாடங்கள் குறித்து கேட்டார்.

மேலும் மாணவிகளிடம் கலந்துரையாடி, குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் தங்களது பள்ளியில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவுக்கு ஆசிரியர் இல்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஸ்ரேயா சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

அறிவுறுத்தல்

மேலும் ஆங்கில நாளிதழை கொடுத்து மாணவிகளிடம் படித்து காண்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்தார். தவறு இல்லாமல் படித்த ஷீலா, பரிமளா, மோனிகா, ஸ்ரீ கங்கா ஆகிய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாணவிகள் எதிலும் தயக்கம் காட்டக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் மாணவிகளுக்காக சமைக்கப்பட்ட இரவு உணவான சப்பாத்தியை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் உணவை சுகாதாரமாகவும், சுவையாகவும் வழங்க விடுதி காப்பாளர் மேனகாவுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story