மோகனூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
மோகனூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி திடீரென ஆய்வு செய்தார்.
மோகனூர்:
திடீர் ஆய்வு
விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் 3 நாட்களில் கரைக்கப்படுவது வழக்கம். அதன்படி மோகனூர் காவிரி ஆற்றில் நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, சேலம் மாவட்டம் மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேற்று திடீரென ஆய்வு செய்தார். மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அவர் ஆய்வு செய்து, போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அப்போது சிலைகள் கரைக்கப்படுவதையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பகுதியில் சிலைகளை பாதுகாப்பாக கரைக்க வழிவகை உள்ளதா? என்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் சிலைகள் கரைக்கப்பட உள்ள காவிரி ஆற்றின் பிற பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் வருவாய்த் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர், போலீசார் உடன் இருந்தனர்.