வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க 1,627 இடங்களில் சிறப்பு முகாம் நாமக்கல்லில் கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க 1,627 இடங்களில் சிறப்பு முகாம் நாமக்கல்லில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் 1,627 இடங்களில் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5.28 லட்சம் பேர் படிவம் வழங்கினர்
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம், பரமத்திவேலூர் மற்றும் சேந்தமங்கலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 14 லட்சத்து 30 ஆயிரத்து 467 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 232 பேர் வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை வழங்கி உள்ளனர். இது 36.84 சதவீதம் ஆகும். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்னும் 9 லட்சத்து 3 ஆயிரத்து 455 பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 1,627 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான 6பி படிவத்தை வழங்கினர். நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு தக்க ஆலோசனையை வழங்கினார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக இதுவரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம் கொடுத்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு :-
ராசிபுரம்-90,692, சேந்தமங்கலம்-87,392, நாமக்கல்-91,164, பரமத்திவேலூர்-92,496, திருச்செங்கோடு-90,132, குமாரபாளையம்-76,356.
சிறப்பு முகாமில் ஆதார் எண்ணை இணைக்க படிவம் கொடுத்த வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (திங்கட்கிழமை) தெரியவரும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.