தென்னக ரெயில்வே பொது மேலாளர் நேரில் ஆய்வு
மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா நேரில் ஆய்வு செய்தார்.
மொரப்பூர்:
மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா நேரில் ஆய்வு செய்தார்.
பொது மேலாளர் ஆய்வு
மொரப்பூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா நேரில் ஆய்வு செய்தார். அப்போது ெரயில் நிலையத்தில் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் வசதி, லிப்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மொரப்பூர்-தர்மபுரி ரெயில்வே திட்டம் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் அடுத்த கட்ட பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பயணிகளின் வசதிக்காக புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உரிய நடவடிக்கை
இந்த ரெயில் நிலையத்தில் பழனி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நிறுத்த கோரி செந்தில்குமார் எம்.பி. மற்றும் ரெயில் பயணிகள் சங்கம் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு கொடுத்துள்ளன. இந்த மனு மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது செந்தில்குமார் எம்.பி., ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன், ரெயில்வே நிலைய மேலாளர் உலகநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், ரத்தினவேல், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், ஊராட்சி தலைவர்கள் உமாராணி உலகநாதன் (மொரப்பூர்), தமிழ்செல்வி ரங்கநாதன் (தாசரஅள்ளி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு
கடத்தூர் அருகே உள்ள புட்டிரெட்டிப்பட்டி ெரயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா நேரில் ஆய்வு செய்தார். அப்போது பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட வாரிய உறுப்பினருமான செந்தில் மற்றும் பொதுமக்கள் புட்டிரெட்டிப்பட்டி ரெயில் நிலையத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதேபோன்று பொம்மிடி ரெயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ், கேரளா எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று செல்லவும், சென்னையில் இருந்து திருப்பத்தூர் வரை இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் சேலம் வரை நீட்டிப்பு செய்ய கோரியும் தென்னக ெரயில் பயணியர் நல சங்கத்தின் செயலாளர் அறிவழகன், தலைவர் காமராஜ் உள்ளிட்ட கிராம மக்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ரெயில்வே கோட்ட பொது மேலாளர் மல்லையாவிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.