தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர்
தஞ்சை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான விஜயகுமார் நேற்று தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில்ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சானூரப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கதிர் அடிக்கும் தளத்தின் கட்டுமான பணியினை அவர் பார்வையிட்டார்.
பின்னர் ரூ.3.47 லட்சம் மதிப்பீட்டில் சானூரப்பட்டி சாரதி கார்டன் வரை 83 மீட்டர் நீளம் கொண்ட புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி குறித்தும், வேளாண் மற்றும் உழவர் நலத்துரையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசுநில தொகுப்பு குழு மூலம் சோளம் பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
சுகாதார நிலையம்
பின்னர் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம், தெலுங்கன் குடிகாடுஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து தாய் சேய் நல அட்டை மூலம் கண்காணிக்கப்படுவதையும், தடுப்பூசிகள் குளிர் பதன பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபோந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் மனோராவில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, சுற்றுலா மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.69.73 லட்சம் மதிப்பீட்டில் மனோரா கடற்கரையில் கான்கிரீட் படகு துறை கட்டுமான பணி, விசைப்படகு எஞ்சின், உயிர்க்காக்கும் உடைகள் போன்ற பல்வேறு படகு குழாம் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
பயிற்சி மையம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.03 லட்சம் மதிப்பீட்டில் மனோரா கடற்கரையில் கான்கிரீட் படகு துறைக்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், ரூ.53.70 லட்சம் மதிப்பீட்டில் சரபோந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோரா கிராமத்தில் பயிற்சி மையம் அமைத்துள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தஆய்வின் போது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார்கள் பெர்ஷியா, ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உடன்இருந்தனர்.