வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு


வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு
x

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான விஜயகுமார் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான விஜயகுமார் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நேற்று காலை வந்த தஞ்சை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான விஜயகுமார் பட்டுக்கோட்டை நகராட்சி லட்சத்தோப்பில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி கண்டியன் தெரு பள்ளி, பட்டுக்கோட்டை என்.ஆர். கார்டன் ஆகிய இடங்களுக்கும் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 14 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி நாட்டுச்சாலையில் நடத்தப்பட்டு வரும் உழவர் வயல் வெளிப்பள்ளியை தமிழக அரசின் கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் பார்வையிட்டார்.

உளுந்து பயிர்

அப்போது அங்கு இருந்த விவசாயிகளிடம் வயல் வெளிப் பள்ளியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் அந்த பயிற்சியில் கலந்து கொண்டு விவசாயிகள் பின்பற்ற இருக்கும் தொழில்நுட்பங்களை பற்றி கேட்டறிந்தார். மேலும் விவசாயிகள் உளுந்து போன்ற பயறு வகைகளை வரப்பு பயிராகவோ பிரதான பயிராகவோ அதிகம் சாகுபடி செய்து‌ அதிக மகசூல் பெற்று நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்த வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.

உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

இடுபொருட்கள்

இறுதியாக வயல் வெளிப்பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாட்டுச் சாலை கிராமத்தில் பிற துறைகள் முலம் செயல்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், உதவி செயற்பொறியாளர் செங்கோல், நாட்டுச்சாலை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி செல்லத்துரை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் இன்பக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story