ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்-கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்-கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர் அறிவுறுத்தினார்.

மண்டல ஆய்வு கூட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சாதி சான்று உண்மை தன்மை குறித்து தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம், தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (தர்மபுரி), சரோஜ்குமார் தாக்கூர் (கிருஷ்ணகிரி), ஸ்ரீ அபினவ் (சேலம்) தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு, மாநில கூர்நோக்கு குழு உறுப்பினர் பிரியதர்சினி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

உறுதி செய்ய வேண்டும்

இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர் பேசியதாவது:-

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20.01 சதவீத ஆதிதிராவிட மக்களும், 1.10 சதவீத பழங்குடி மக்களும் உள்ளனர். இந்த மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சமூக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் 2022-2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,281.76 கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இணையதளம் மூலம் 3.307 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, தாட்கோ மூலம் வீடுகள், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் பயன் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வன்கொடுமை வழக்குகள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம் மாவட்டங்களில் பதிவான வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்தும் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது துறை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


Next Story