ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு
ஓசூரில் ரப்பர் இட்லிகள் விற்கப்படுவதாக புகாரையடுத்து ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு செய்தார்.
ஓசூர்
ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விற்கப்படும் இட்லிகள் ரப்பர் போல உள்ளதாகவும், கெட்டுப்போகாமல் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி ஓட்டல் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஓசூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட ஓட்டல் மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள பல்வேறு உணவு விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ரப்பர் இட்லி விற்கப்படுவதாக புகார் வந்த ஓட்டலில் இருந்து மாதிரிக்காக இட்லிகளை சேகரித்தனர். அதேபோல், அந்த ஓட்டலுக்கு இட்லிகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ஓசூர் சானசந்திரம் பகுதியில் உள்ள இட்லி தயார் செய்யும் இடத்திற்கு சென்று அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த இட்லி மாவு மற்றும் இட்லிகள் ஆகியவற்றை எடுத்து பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்காக, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கூறுகையில், ஓசூர் ராயக்கோட்டை ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தரம் இல்லாத இட்லிகள் விற்கப்படுவதாக புகார் வந்தது. இதன் பேரில் அந்த ஓட்டலில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளது, இதன் முடிவுகள், 21 நாட்களில் தெரியவரும். இட்லியில் ஏதேனும் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.