தர்மபுரி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு-விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு
தர்மபுரி:
தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாயக்கனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.18 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக் குழுக்களுக்கான பணியிடம் கட்டும் பணி, வெள்ளோலை ஊராட்சியில் ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் அத்திமாநகர் ஓடை தடுப்பணை அமைக்கும் பணி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கோம்பை மயானம் முதல் ஊத்துக்கொட்டாய் வரை நீர்வரத்து இணைப்பு கால்வாய் அமைக்கும் பணி, ரூ.98.86 லட்சம் மதிப்பீட்டில் மாதன்கொட்டாயில் தடுப்பணை அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
இதைத்தொடர்ந்து ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் கோம்பை ஓடையில் தடுப்பணை அமைக்கும் பணி, ரூ.90.90 லட்சம் மதிப்பீட்டில் வெங்கடானூர் கிராமத்தில் தடுப்பணை அமைக்கும் பணி, நாயக்கனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.80 லட்சம் மதிப்பீட்டில் வெங்கடானூர் மலையடிவாரம் அருகில் தடுப்பணை அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
பின்னர் முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் கல் தடுப்பணை அமைக்கும் பணியையும், அதே கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் மலையடி குட்டை மேம்பாடு செய்யும் பணியையும், வெள்ளோலை ஊராட்சி கோம்பை கிராமத்தில் சமூக பொருளாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறிவுறுத்தல்
அப்போது கலெக்டர் சாந்தி கூறுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் தர்மபுரி ஒன்றியத்தில் மொத்தம் ரூ.2.69 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்து, தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், தனபால், உதவி பொறியாளர் துரைசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.