சேலத்தில்180 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


சேலத்தில்180 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
சேலம்

சூரமங்கலம்

சேலத்தில் 180 தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு 3 ரோடு அருகே உள்ள ஜவகர் மில் மைதானத்தில் நடைபெற்றது.

சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் மேற்பார்வையில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். மொத்தம் 180 பள்ளி வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.

டிரைவர்களுக்கு அறிவுரை

அப்போது வாகனங்களில் அவசர வழி சரியாக உள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? அதில் மருந்து காலாவதியாகி உள்ளதா? வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமரா செயல்படுகிறதா? வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் போது 5 வாகனங்களில் குறைகள் இருந்தது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டன. மேலும் அந்த வாகனங்களில் குறைகளை சரி செய்து காண்பித்த பிறகே வாகனத்தை இயக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஆய்வின்போது வாகன ஓட்டிகளுக்கு தீத்தடுப்பு குறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிராஜ் அல்வனீஸ், சித்துராஜ் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் எடுத்து கூறினர். மேலும் வாகனங்களை சாலைகளில் விபத்து இல்லாமல் எப்படி இயக்குவது என்பது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயவேல் எடுத்துரைத்தார். பின்னர் மருத்துவத்துறை சார்பில் விபத்து ஏற்படும் போது எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story