சூளகிரி, ஓசூர் பகுதிகளில்வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ஓசூர்,
சூளகிரி, ஓசூர் பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
சூளகிரி, ஓசூர் ஊராட்சி ஒன்றியங்களில் தோட்டக்கலை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை, மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் பசுமைக்குடில் மற்றும் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சாகுபடி, நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து உல்லட்டி கிராமத்தில் ஜெர்பரா மலர் சாகுபடி செய்திருப்பதை கலெக்டர் பார்வையிட்டு சாகுபடி முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், ஓசூர் உழவர் சந்தை, சானசந்திரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில் நிலக்கடலை விதைகளை வழங்கினார்.
பன்னாட்டு ஏல மையம்
தொடர்ந்து, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பில், காய்கறிகளை முதன்மைப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். பேரண்டபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓசூர் மலர்களுக்கான பன்னாட்டு ஏல மையம் மற்றும் அங்குள்ள குளிர்பதன கிடங்கு, தரம் பிரிப்பு கூடம், 16 கடைகள், கூட்டரங்கம் பயிற்சி அரங்கம் மற்றும் வினியோகக் கூடம் ஆகியவற்றையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். மலர்கள் பதப்படுத்தும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குனர் காளிமுத்து, சர்வதேச மலர் ஏல மைய உதவி இயக்குனர் பிரபாகரன் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.