மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கலெக்டர் சரயு திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் கலெக்டர் சரயு திடீர் ஆய்வு செய்தார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு
கிருஷ்ணகிரி தாலுகாவில் 135 முழுநேர ரேஷன் கடை, 119 பகுதிநேர ரேஷன் கடை என மொத்தம் 254 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 129 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் சரயு கிருஷ்ணகிரி தாலுகாவிற்குட்பட்ட மாரிசெட்டிஅள்ளி பாறையூர், மலையாண்டஅள்ளி, குட்டூர் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? சரியான நேரத்திற்கு திறக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். கடையில் பொருட்கள் இருப்பு, கொடுக்கும் பொருட்களுக்கு உரிய ரசீதுகள், கணக்குகள் வைத்திருக்க வேண்டுமென ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கூறினார்.
குடிநீர்
தொடர்ந்து காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சவுட்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் சரயு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் குடிநீர், கழிப்பறை வசதிகள், மதிய உணவு சமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள் பூமாலை வணிக வளாகத்தை மறு சீரமைப்பு செய்யுமாறும், பணிகளை விரைந்து முடிக்கவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் ரகு, கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், வெங்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.