நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேவையான வசதிகள் குறித்து அங்குள்ள வீரர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

சென்னை,

சென்னை நேரு விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக தினமும் பயிற்சி செய்கிற வீரர், வீராங்கனைகள், செவித்திறன் குன்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மைதானத்தில் உள்ள பயிற்சி வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

நேரு விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை அரங்கை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி கூடுதல் வசதிகள் மற்றும் உபகரணங்கள் தேவை குறித்தும் கேட்டறிந்தார்.

நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு

உடற்பயிற்சி கூடம், மாணவ-மாணவியர் தங்கும் விடுதி மற்றும் அதில் நடைபெற்று வருகிற பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து, பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

மேலும் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக பராமரித்திடவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story