மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் 'பார்கோடு' ஆய்வு
தெலுங்கானாவில் இருந்து வேலூருக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் ‘பார்கோடு' ஆய்வு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள குடோன்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடோனிலும் ஏராளமான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 3,595 வாக்குப்பதிவு எந்திரங்கள், 775 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 5-ந்தேதி லாரிகளில் வேலூருக்கு கொண்டுவரப்பட்டு குடோனில் தனியாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களின் பார்கோடு ஸ்கேன் செய்யும் பணி நடந்தது. வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றன. இதில், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.