கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணி-கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு


கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணி-கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகை தண்ணீர் கடலில் வீணாவதை தடுக்க பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

வைகை தண்ணீர் கடலில் வீணாவதை தடுக்க பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.

வாய்க்கால்கள் சீரமைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுத்து பாசன கண்மாய்களுக்கு செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறையின் சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.30.5 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த மராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பரமக்குடி, பாண்டியூர், சிறகிக்கோட்டை பகுதிகளுக்கு வைகை ஆற்றிலிருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மற்றும் வைகை ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணி, தடுப்பணைகள் கட்டும் பணி மற்றும் பாசன கண்மாய்களில் கலுங்குகள், மடைகள் புதிதாக கட்டும் பணிகளை பார்வையிட்டு பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வைகை வடிநில கோட்டத்தின் மூலம் வைகை ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரக்கூடிய தண்ணீர் பாசன கண்மாய்களுக்கு செல்லும் வகையில் கால்வாய்களை சீரமைக்க உத்தரவிட்டார். மழைக்காலத்தில் வைகையில் வரக்கூடிய தண்ணீர் வீணாகாமல் திட்டமிட்டு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கண்மாய்கள்

ராமநாதபுரம், தொருவளூர், காரேந்தல் பகுதி வைகை ஆற்றிலிருந்து பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களில் கருவேல மரங்களை அகற்றி கால்வாய்களை சீரமைக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். வைகை ஆற்றிலிருந்து மழைக்காலங்களில் வரும் தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு சென்று முழு கொள்ளளவை எட்டியதும் அதனை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் உள்ள பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று முழுமையாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

தண்ணீர் கடலுக்கு சென்று கலந்து வீணாவதை தடுத்து பாசன கண்மாய்களுக்கு கொண்டு சென்று கண்மாய்களில் தண்ணீரை நிரப்ப உரிய பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆனந்த் பாபு, ராமநாதபுரம் தாசில்தார் சுரேஷ்குமார், பரமக்குடி தாசில்தார் ரவி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story