தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து
சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தகர கொட்டகை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 1,240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 5 கட்டிடங்கள் உள்ளன. இதில் ஒரு கட்டிடம் பழுதடைந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் போது மான வகுப்பறை கட்டிடம் இல்லாததால் தற்காலிகமாக தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, அதில் 11 வகுப்பறைகள் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை காரணமாக வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் தகர கொட்டகையில் தண்ணீர் ஓழுகியதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
இதன் காரணமாக கடந்த 14-ந்தேதி 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவர்களின் நலன்கருதி இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர். இதுகுறித்து செய்தி தினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் வெளிவந்தது.
கல்விதுறை அதிகாரிகள் ஆய்வு
இதன் எதிரொலியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் பள்ளி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கவிநிலவன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினார், பொற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இடபற்றாகுறையால் பள்ளி வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட து.
சுழற்சி முறையில் வகுப்புகள்
அதன்படி காலை 8.10 மணிக்கு பள்ளி தொடங்கி 12.40 மணி வரையிலும், மதியம் 1 மணிக்கு தொடங்கி மாலை 5.10 வரையிலும் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய கட்டிடம் கட்டும் வரை காலை நேரங்களில் 6, 7, 9, 10-ம் வகுப்பிற்கும், மாலை 8, 11, 12-ம் வகுப்புகளும் செயல்படும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.