தேனி உழவர் சந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
தேனி உழவர் சந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி உழவர் சந்தை மற்றும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மனுஜ் ஷியாம் சங்கர் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பெரியகுளம் தொழிலாளர் துணை ஆய்வாளர் விஜயராகவன், துணை ஆய்வாளர்கள் ராஜா, செந்தில்குமார், முத்திரை ஆய்வாளர் கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர். முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடைக்கற்களை வியாபாரிகள் சிலர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உதவி ஆணையர் கூறும்போது, "தராசுகள் உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடப்பட வேண்டும். தற்போது பறிமுதல் செய்த தராசுகள், எடைக்கற்களை பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இதுபோன்ற முத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.