வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் விதிமீறலில் ஈடுபட்ட 15 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திடீர் ஆய்வு
சென்னை தொழிலாளர் துறை ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையாளர் (பொறுப்பு) குமரன், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் சசிகலா ஆகியோர், வணிக நிறுவனங்களில் சட்டப்படி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
அதன்படி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடையளவுகள் (பொட்டல பொருட்கள்) விதிகள் 2011-ன் கீழ் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
15 கடைகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள், சிகரெட் விற்பனை செய்யும் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 75-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சில கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 12 கடைகள் மீதும், சட்டமுறை எடையளவுகள் (பொட்டல பொருட்கள்) விதியின்படி 3 கடைகள் மீதும் என மொத்தம் 15 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எடையளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது ஆகியன தண்டனைக்குரியதாகும். எனவே ஆய்வின்போது விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.