தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

அரக்கோணத்தில் நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகா தனியார்பள்ளி வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது 10 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகா தனியார்பள்ளி வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டது. அப்போது 10 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக வளாகம் அருகே தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பகுதிகளில் இருந்து 27 பள்ளிகளின் 133 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல் தலைமையில், ராணிபேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் முனி சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வாகனங்களின் அமைப்பு, படிக்கட்டுகள், ஜன்னல்கள், அவசர வழி உள்ளிட்ட வசதிகள் உள்ளதா, என ஆய்வு செய்தனர்.

10 வாகனங்கள் நிராகரிப்பு

மேலும் வாகனங்களில் தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா, புத்தகங்கள் வைக்கும் அலமாரிகள், முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், பிரதிபலிப்பான் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் 10 வாகனங்களில் பல்வேறு சிறு குறைகள் இருந்ததால் நிராகரிக்கப்பட்டன. இந்த வாகனங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின் மீண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு முடிக்கப்பட்ட பின் உரிய சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ராணிபேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பள்ளி வாகனங்களில் இருந்து மாணவர்கள் இறங்கி, அவர்கள் கடந்து சென்றதை உறுதி செய்த பின்னரே முன்புறம், பின்புறமும் வாகனத்தை இயக்க வேண்டும். செல் போன் பேசியபடி வாகனத்தை ஓட்டக் கூடாது. பிரதான சாலைகளில் நிறுத்தும் போது பிற வாகனங்கள் செல்லும் வகையில் வழி விட்டு நிறுத்தி குழந்தைகள் இறங்கி கடந்த பின்னர் செல்ல வேண்டும் என்றார்.


Next Story